ஆன்மீகம்

கிருஷ்ணரை யாரால் கட்டிப்போட முடியும்

சென்னை, செப். 5- தாமோதரன் – கண்ணனை உரலில் கட்டி போட்ட யசோதம்மா கதை தெரியும். நாராயணீயம் படிக்கும் போது கிட்டே வந்து குறும்பு செய்யும் உண்ணி கண்ணனையும் நமுக்கு தெரியும். ஆனால் அவனை சங்கிலியால் கட்டி போட்ட சகாதேவன் கதை தெரியுமா? இதோ உங்களுக்காக படித்ததை பகிர்கின்றேன்.

உண்மையில் பாண்டவர்களில் மிகப்பெரிய ஞானியும் ஜோதிடரும் சகாதேவனே ஆவார். பூதம், வர்தமானம், பவிஷ்யம் மூன்றையும் ஒரே மாதிரி பார்கக்கூடிய ‘திரிகால ஞானம்’ சகாதேவனுக்கு சித்தித்திருந்தது.

குருஷேத்திர யுத்தத்தில் யாரெல்லாம் மரிப்பார்கள், யார் ஜெயிப்பார்கள் என்பது யுத்தம் தொடங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்பே சகாதேவனுக்குத் தெரியும்! ஆனால் அந்த ரகசியங்களை வெளியே சொன்னால் தலை வெடித்து மரிப்பான் என்றொரு சாபம் அவனுக்கு இருந்தது. அதனால் அவன் எல்லாம் அறிந்தும் மௌனியாக இருந்தான்.

சகாதேவனின் ஞானம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு மஹாபாரதத்தில் வேறொரு சான்றும் உள்ளது. குருஷேத்திர யுத்தம் உறுதியானபோது, எதிரிப் படையிலுள்ள துரியோதனன் கூட தனக்கு யுத்தத்தில் ஜெயிக்க ஏற்ற மிகச் சிறந்த சுபமுகூர்தத்தைக் குறித்து வாங்க வந்தது பாண்டவனான சகாதேவனிடம்தான்!

தனது எதிரி என்று தெரிந்தும், ஒரு ஜோதிடனாக சத்தியமாக இருப்பதே தனது தர்மம் என்று நம்பிய சகாதேவன், கௌரவர்கள் யுத்தத்தில் ஜெயிக்க ஏற்ற மிகச் சரியான முகூர்தத்தைக் குறித்துக் கொடுத்தான். பிறகு கிருஷ்ணர் தனது மாய லீலைகளால் சூரிய சந்திரர்களின் கதியை மாற்றி, அந்த முகூர்தத்தின் பலனை இல்லாமல் ஆக்கினார்.

யுத்தம் தொடங்குவதற்கு சற்று முன், சகாதேவனின் இந்த அபாரமான ஞானத்தைச் சோதிக்க சாட்சாத் பகவான் கிருஷ்ணர் நேரில் வந்தார். கிருஷ்ணர் சகாதேவனிடம் சென்று,  ‛சகாதேவா, நீ பெரிய ஞானி அல்லவா. வரப்போகும் இந்த மஹாபாரத யுத்தத்தைத் தவிர்க ஏதேனும் வழி உண்டா? இருந்தால் நீ சொல்.’ எனக் கேட்டார்.

சகாதேவன் கிருஷ்ணரைப் பார்து மெல்ல புன்னகைத்தான். அவன் சொன்னான், ‛பகவானே, இந்த யுத்தத்தைத் தவிர்ப்பது மிக எளிது. அதற்கு நான்கு காரியங்கள் செய்தால் போதும்.’

“அவை என்னென்ன?” கிருஷ்ணர் ஆர்வத்துடன் கேட்டார்.

சகாதேவன் சொன்னான்:

‛முதலாவதாக, கௌரவ நாதனான துரியோதனைக் கட்டிப் போடுங்கள்.

இரண்டாவதாக, என் மூத்தவரான அர்ஜுனனின் காண்டீப வில்லை ஒடித்து விடுங்கள்.

மூன்றாவதாக, திரௌபதி தனது சபதத்தை விட்டுவிட்டு, துச்சாதனின் ரத்திற்காகக் காத்திருக்காமல் தனது முடியை இப்போதே கட்டிக்கொள்ளத் தயாராக வேண்டும்.”

இதைக் கேட்ட கிருஷ்ணர், ‛சரி, இந்த மூன்று காரியங்கள் செய்தால் யுத்தம் நிற்கும் என்பது சரி. ஆனால் நீ நான்கு காரியங்கள் உள்ளன என்றாயே? அந்த நான்காவது காரியம் என்ன?”

சகாதேவன் கிருஷ்ணரின் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடியே சொன்னான்:

“நான்காவது காரியம், இந்த உலகத்தை முழுவதும் யுத்தம் செய்ய வைக்க சூழ்ச்சிகள் செய்யும் தங்களை, சாட்சாத் பகவான் கிருஷ்ணரைப் பிடித்து, ஒரு சங்கிலியால் அரண்மனைத் தூணில் கட்டிப் போட வேண்டும் “
இந்த நான்கு காரியங்கள் செய்தால் குருஷேத்திர யுத்தம் நடக்காது.” என்றார் சகாதேவன்.

சகாதேவனின் புத்திசாலித்தனத்தையும் தைரியத்தையும் கண்டு கிருஷ்ணர் ஆச்சரியப்பட்டுப் போனார். கிருஷ்ணர் அவனை மேலும் சோதிக்க விரும்பி,  ‛சகாதேவா, நீ சொன்னது சரிதான்.

ஆனால் என்னைக் கட்டிப் போட இந்த ஈரேழு பதினான்கு உலகத்தில் யாருக்கு சக்தி உள்ளது? நீ என்னை ஒருமுறை கட்டிப் போடு, பார்போம்” என்று சொல்லிக்கொண்டு கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை அவன் முன் காட்டினார். கோடானுகோடி பிரபஞ்சங்கள் உள்ளே நிற்கும் அந்த விஸ்வரூபத்தைக் கட்டிப் போடுவது அசாத்தியமானது.

ஆனால் சகாதேவன் சற்றும் பயப்படவில்லை. அவன் தன் கண்களை மூடி, உள்ளம் உருகி பகவானை தியானித்தான். அவன் தன் உள்ளே இருந்த உறுதியான பக்தியாலும் அன்பாலும் கிருஷ்ணரின் விஸ்வரூபத்தைத் தனது மனதிற்குள் ஆவாஹனம் செய்தான். சகாதேவனின் ஆத்மார்தமான பக்திக்கு முன் பகவானின் திவ்ய ரூபம் மெல்லச் சிறியதாகத் தொடங்கியது.

இறுதியில் சகாதேவனின் பக்தியின் சங்கிலிகளால் கிருஷ்ணர் முழுமையாகக் கட்டுண்டார்! அவனது மனதின் உள்ளே கிருஷ்ணரால் ஒரு அடி கூட முன்னே வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கிருஷ்ணர் புன்னகையுடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பகவான் சொன்னார்: “சகாதேவா, நீ ஜெயித்துவிட்டாய். ஆயுதங்களாலோ சைன்யங்களாலோ என்னைக் கட்ட முடியாது. ஆனால் ஒரு உண்மையான பக்தனின் அன்புக்கு முன் நான் எப்போதும் தாசன்தான். உனது பக்தியால் நான் கட்டுண்டேன். உனக்கு என்ன வரம் வேண்டும்?” கேள் என்றார் கிருஷ்ணன்.

சகாதேவன் கைகூப்பி சொன்னான், “பகவானே, எனக்கு யுத்தத்தின் பலன் தெரியும். எனக்கு ஒரே ஒரு வரம் மட்டும் வேண்டும்.

இந்த யுத்தத்தில் என் மூத்தவர்களான பாண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் தாங்கள் காத்தருள வேண்டும்.” கிருஷ்ணர் மகிழ்சியுடன் அந்த வரத்தைக் கொடுத்து ஆசிர்வதித்தார்.

தனது சர்வ ஞானத்தையும் பகவானின் பாதங்களில் அர்பணித்த, பக்தியால் தெய்வத்தையே கட்டிப் போடும் சக்தி கொண்டிருந்த சகாதேவனின் இந்தக் கதை மஹாபாரதத்தின் மிக அழகான பக்திக் கதைகளில் ஒன்றாகும்.

யசோதம்மா பாசத்தால் கண்ணனை கட்டி போட்டாள். சகாதேவன் பக்தியால் அவனை கட்டினான். நாராயணீயம் அனுசந்தானம் செய்து நாமும் அவனை கட்டிப்போட முடியுமா என்று பார்ப்போமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp