கதவை திறந்து வைத்து துாங்கியவர்கள் வீட்டில் திருடர்கள் கைவரிசை
சென்னை, ஆக. 26- காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கியவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து செல்போனை திருடிச் சென்றுள்ளனர்.
பெரம்பூர் மடுமா நகர் பகுதியை சேர்ந்தவர் ரோகித் 24 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டின் கதவை மூடாமல் காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.
நேற்று காலை 7:00 மணி அளவில் எழுந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த தன்னுடைய விலை உயர்ந்த மொபைல்போன் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரோகித் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதேபோல், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்சாரி, 22. பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தங்கி, மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டின் கதவை பூட்டாமல் காற்றுக்காக திறந்து வைத்து விட்டு தூங்கி உள்ளார்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த இவரது மொபைல்போனை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அன்சாரி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

