சென்னை

சென்னையில் பயங்கரம்: த.வெ.க., நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை

சென்னை, செப். 7- சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பெசன்ட் நகர், வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 45. ரியல் எஸ்டேட் தொழிலதிபர். ஐ.டி., நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். அ.தி.மு.க.,வில், 174வது வார்டு வட்ட செயலராக இருந்தார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் சேர்ந்து, வட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் மீது, கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், பெசன்ட் நகர், ராமசாமி அவென்யூவில் உறவினர் புருஷோத்தமன் என்பவருடன், நேற்று முன்தினம் இரவு பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐவர் கொண்ட கும்பல், கத்திகளுடன் கீழே இறங்கினர். இதை பார்த்த கண்ணன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால், அந்த கும்பல், அவரை சுற்றி வளைத்து வெட்டியது. கழுத்து, முதுகு, கால், கைகள் மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற புருஷோத்தமனை தாக்கியதோடு, அவரை அங்கிருந்து துரத்தியடித்தது.

அவரது நண்பர்கள் கொலையாளிகள் மீது கற்களை வீசி தடுக்க முற்பட்டனர். ஆனால் அந்த கொலை வெறி கும்பல் கண்ணனை வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையே, கண்ணன் வெட்டி கொல்லப்படும் காட்சி இணையத்தில் பரவி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சாஸ்திரி நகர் போலீசார் நடத்திய விசாரணையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் கொலை வழக்கில், கண்ணன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த முன்விரோதத்தில், வேலுவின் மகன் பரணி தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கண்ணனை கொன்றது தெரிந்தது.

இதையடுத்து, பரணி, 20,ராகேஷ், 20, நரேஷ், 20, மணிகண்டன், 20, ஹரிஹரன், 20, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

இக்கொலை குறித்து போலீசார் கூறியதாவது:
மாமூல் வசூலிப்பது மற்றும் கேபிள் தொழிலில் ஏற்பட்ட போட்டியால், திருவான்மியூரை சேர்ந்த கந்தன் மற்றும் சிவா இடையே முன்விரோதம் இருந்தது.

கடந்த 2009ல், கந்தன் தரப்பைச் சேர்ந்த சிலர், சிவாவை கொலை செய்தனர். இந்த வழக்கின் குற்றவாளிகளில், கொலை செய்யப்பட்ட கண்ணனும் ஒருவர். இக்கொலைக்கு பழிவாங்கும் விதமாக, சிவா தரப்பினர், 2013ல் கந்தனை கொலை செய்தனர்.

நந்தனம், தேவர் சிலை அருகில், சிவாவின் சகோதரர் வேலுவை, 2016ல் கந்தன் தரப்பினர் கொன்றனர். இந்த கொலையிலும், கண்ணனுக்கு மறைமுக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இக்கொலைகளுக்கு பழிக்குப்பழி தீர்க்க, வேலுவின் மகன் பரணி, நண்பர்களுடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. இக்கொலைக்கு, வேறு எதாவது காரணம் இருக்குமா என, பல்வேறு கோணங்களில் விசாரிக்கிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp